பலாலியில் 3 ஆவது வாரமாக காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள தங்களது பூர்வீகத் தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை வீதியில் இறங்கிப் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

பலாலிச் சந்தியில் இன்று காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்கள், நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தங்கள் நிலங்களை நிபந்தனையின்றி மீள வழங்குமாறு வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பினர்.

இன்றைய போராட்டத்தின் போது, கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராட்டப் பகுதியில் தற்காலிகக் கொட்டகை (பந்தல்) ஒன்றை அமைக்கப் பொதுமக்கள் முற்பட்டனர். எனினும், அங்கு குவிக்கப்பட்டிருந்த பலாலிப் பொலிஸார் பொதுமக்களைக் கொட்டகை அமைக்க விடாது தடுத்து, அதற்கு அப்பட்டமாகத் தடை விதித்தனர்.

 இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும் பங்கேற்றிருந்தார்.

Post a Comment