இந்தியாவின் ராஜஸ்தானில் பிரசவத்திற்குப் பின் 18 தாய்மார்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரச வைத்தியசாலைகளில் கடந்த மே மாதம் முதல் பிரசவத்திற்கு பிறகு 18 தாய்மார்கள் அடுத்தடுத்து உயிரிழந்த புள்ளிவிவரம் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது.மேலும் பிரசவத்தின் பின் 7 பெண்கள் சிறுநீரக செயலிழப்புக்கு ஆளாகி டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்தத் தொடர் உயிரிழப்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்த மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தொடர் மரணங்கள் குறித்து ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சர் தெரிவிக்கையில்,
"இந்த மரணங்கள் குறுகிய கால இடைவெளியில் நிகழ்வது பெரும் ஆச்சரியமாக உள்ளது. இதற்கான துல்லியமான காரணம் என்னவென்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆரம்பத்தில், வெப்ப அலை காரணமாக இந்த உயிரிழப்புகள் நேரிட்டிருக்கலாம் என்று நாங்கள் கருதினோம். ஆனால், தற்போது வெயிலின் தாக்கம் குறைந்துவிட்ட நிலையிலும் பாதிப்புகள் தொடர்கின்றன."
உயிரிழந்த பெண்களின் இரத்தப் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தும் சீராக உள்ளன. மற்ற வைத்திய காரணிகளும் சரியாகவே இருப்பதாக தோன்றும் நிலையில், இந்தத் தொடர் மரணங்களின் பின்னணியில் உள்ள மூலக் காரணத்தை கண்டறிய உயர்மட்ட வைத்திய நிபுணர்களின் உதவியை அரசு நாடியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஏதேனும் வைத்திய அலட்சியம் அல்லது குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
இதற்காகத் தகுதிவாய்ந்த வைத்திய வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, பாதிப்பு ஏற்பட்ட அனைத்து அரசு வைத்தியசாலைகளிலும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்று தெரிவித்துள்ளார்.
அரசு வைத்தியசாலைகளிலும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள் அடுத்தடுத்து உயிரிழப்பதும் உயிர் பிழைத்தவர்கள் சிறுநீரகப் பாதிப்புடன் போராடுவதும் ராஜஸ்தான் மக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
