எதிர்வரும் பண்டிகைக் காலம் முதல் மே மாதம் நடுப்பகுதி வரை நாட்டுக்குத் தேவையான போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும், எரிபொருள் நிலையங்களில் மீண்டும் வரிசைகள் உருவாவதைத் தடுக்கும் நோக்கில், ஒற்றை மற்றும் இரட்டை இலக்க அடிப்படையிலான கியூ.ஆர். குறியீட்டு முறைமை இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் சில வாரங்களுக்கு தொடர்ந்து மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் புதன்கிழமை (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒற்றை இரட்டை இலக்கத்தின் அடிப்படையில் கியூ.ஆர் குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் இன்று வியாழக்கிழமை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். இன்றைய தினம் 32 000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 5000 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் என்பவற்றுடன் கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளது. 6 மற்றும் 7ஆம் திகதிகளில் மேலும் இரு டீசல் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.
மார்ச்சில் முற்பதிவு செய்யப்பட்ட கனிசமான கப்பல்கள் நாட்டை வந்தடைந்ததைப் போன்று, இம்மாதமும் கப்பல்கள் உரிய தினங்களில் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வரும் பண்டிகை காலங்களில் மாத்திரமின்றி, மே மாதம் நடுப்பகுதி வரை எரிபொருள் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் எரிபொருட்களை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களை அறிவுறுத்துகின்றோம்.
எதிர்வரும் சில வாரங்களுக்கு ஒற்றை இரட்டை மற்றும் கியூ.ஆர். குறியீட்டு முறைமைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம். இந்த முறைமை நடைமுறையிலிருப்பதன் காரணமாகவே வரிசைகள் இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை தொழிற்துறைகளுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படவில்லை என்றார்.
