காலி, கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில், பணிபுரிந்த மேற்பார்வையாளரான பெண்ணை சக ஊழியர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயதான கிம்ஹானி பெரேரா என்ற இளம் பெண்ணே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.தாக்குதலை நடத்தியவர் அதே தொழிற்சாலையில் உதவியாளராகப் பணிபுரிந்த பதுளை பகுதியைச் சேர்ந்த திருமணமான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் இரத்தக் கறையுடன் கூடிய கத்தி ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகத் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது. எனினும் கடந்த சில நாட்களாக அந்தப் பெண் சந்தேக நபருடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று காலை பணிக்குச் சென்ற அந்தப் பெண், தனது கைப்பையை வைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த சந்தேக நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அப்போது ஆத்திரமடைந்த சந்தேக நபர், மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார். தாக்குதலுக்குப் பிறகு அங்கிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர், தான் தங்கியிருந்த அறைக்குச் சென்று தனது உடைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சந்தேக நபரை கைது செய்வதற்காக கஹதுடுவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
