எரிபொருள் வரிசைகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் குவிப்பு


எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள தேவையற்ற பதற்றம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பாரிய வாகன நெரிசலும் நீண்ட வரிசைகளும் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர: "இதற்காகப் பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை. QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அந்தந்த வாகன வகைகளுக்கு ஏற்பத் தேவையான எரிபொருள் அளவு முறையாக வழங்கப்படும். மக்கள் காட்டும் தேவையற்ற அவசரமே எரிபொருள் நிலையங்களில் இவ்வளவு கூட்ட நெரிசலுக்குக் காரணமாகியுள்ளது. இதனால், அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் தலைமையகப் பொலிஸ் பரிசோதகர்களை நாம் ஈடுபடுத்தியுள்ளோம். பொதுமக்கள் அமைதி காத்தால் இந்தப் பிரச்சினை ஏற்படாது. 10 லீற்றர் தேவைப்படும் இடத்தில் 50 லீற்றர் அடிக்க முற்படுகிறார்கள். இவை அனைத்தும் அவசரப்படுவதால் ஏற்படும் விளைவுகள். யுத்த நிலைமை காரணமாகக் கொண்டுவரப்பட்ட ஒரு முகாமைத்துவமே இது. உங்கள் வாகனத்திற்குத் தேவையான எரிபொருளை எந்தவொரு நிலையத்திலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, வீதி நெரிசலைக் குறைக்கவும் ஒழுங்கைப் பேணவும் போக்குவரத்துப் பொலிஸாரும் ஏனைய அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.