ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எரிசக்தி உட்கட்டமைப்புகளையும் ஈரான் இலக்கு வைக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஈரானின் அரச ஊடகங்களை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்திற்குள் திறக்காவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமான ஈரானின் இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.இதேவேளை ஈரானின் உள்கட்டமைப்பு தாக்கப்பட்டால், அது 'எந்தவிதமான நிதானத்தையும்' காட்டாது" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்திருந்தார்.மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஹோர்முஸ் ஜலசந்தி செயலிழந்துள்ளதால், எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதல்கள் பெப்ரவரி 28 அன்று தொடங்கிய நிலையில் அப்போதைய உச்ச தலைவர் அலி கமேனி உட்பட குறைந்தது 1,300 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
