மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07) காலை 4.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது பண்டார் அப்பாஸ் நகருக்கு மேற்கே 74 கிலோமீற்றர் தொலைவிலும், 10 கிலோமீற்றர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளதாக அதன் தரவுகள் தெரிவிக்கின்றன.இதன்படி, கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் ஈரானில் பதிவான இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை, பார்ஸ் (Fars) மாகாணத்தின் கெராஷ் (Gerash) பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
