சற்று முன் பிரதமர் அதிரடி அறிவிப்பு

 

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், அரச சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மக்கள் நலனுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சியினரிடம் கோரிக்கை விடுத்தார்.

வியாழக்கிழமை ,மார்ச் 19, பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், மலையகச் சமூகத்தின் கல்வியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளில் ஆசிரியர் வெற்றிடங்களே பிரதானமானவை எனக் குறிப்பிட்டதுடன், நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் 23,000 இற்கும் அதிகமான ஆசிரியர்களைச் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் மாவட்ட ரீதியான கலந்துரையாடல்களின் போது இவை குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தித் துரித தீர்வுகள் எட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

உலகளாவிய தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளிலிருந்து நாடு மீண்டு, மீண்டும் மூச்சுவிடத் தொடங்கியுள்ள ஒரு தருணத்திலேயே தற்போதைய நெருக்கடி உருவாகியுள்ளது. இவ்வாறான நிலையில் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் பங்களிப்பு குறித்து அவர்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் வீணான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தின் இயலாமை மற்றும் இராஜதந்திரத் தோல்விகள் போன்ற போலி விம்பங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தைத் தூண்டி வருகின்றனர்.

ஜனநாயகத் தேர்தல் முறையினூடாகக் கொள்கைகளை முன்வைத்து மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குப் பதிலாக, நாடு அழிவுப்பாதைக்குச் சென்றாலும் பரவாயில்லை என்ற நோக்கில் அதிகாரத்தைப் பறிக்க எதிர்க்கட்சி முயல்கிறது. நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளி, பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்த தரப்பினரே, கடந்த காலங்களில் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகளிலிருந்து தப்புவதற்காக, மக்களால் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்கின்றார்கள்.

எரிபொருள் நெருக்கடியானது அரசாங்கத்தின் இயலாமையினால் ஏற்பட்டது எனக்காட்ட எதிர்க்கட்சியினர் எடுக்கும் முயற்சி வீணானது. தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு உலகளாவிய யுத்தச் சூழலின் நேரடி விளைவாகும். மத்திய கிழக்கில் போர் ஆரம்பித்து 20 நாட்களுக்குள் எமது அரசாங்கம் எடுத்த சரியான தீர்மானங்களினால், தெற்காசியாவிலேயே எரிபொருள் விலை மிகக் குறைந்த அளவில் திருத்தப்பட்ட நாடாக இலங்கை இருந்து வருகின்றது.

எண்ணெய் விநியோகத்தில் சில குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதை நாம் மறுக்கவில்லை. எனவேதான், எரிபொருள் நுகர்வை முகாமைத்துவம் செய்ய QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதனை மேலும் முறைப்படுத்தி முறைகேடுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், அரச இயந்திரம் மற்றும் கைத்தொழில் துறையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதே எமது நோக்கம். எமது மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற எதிர்க்கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.