படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றி ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அவசியம்


 மறைந்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் நினைவு நிகழ்வில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய முழுமையான உரை


தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், லண்டன்- இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து அண்மையில்  கொழும்பு தமிழ் சங்கத்தில் நடத்திய மறைந்த மூத்த ஊடகவியலாளர்  பாரதி இராஜநாயகம் ஓராண்டு நிறைவு மற்றும்  நினைவு நூல் வெளியீட்டு நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரையின் முழு வடிவம் .பாராளுமன்ற உறுப்பினர்களும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும்,சிரேஷ்ட ஊடகவியலாளர்களும், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்விற்கு "வீரகேசரி" பிரதம ஆசிரியர், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர்  ஸ்ரீகஜன் தலைமை தாங்கினார்.



இலங்கையில் சட்டத்துறை ஜாம்பவானாக இருக்கிற ஜனாதிபதி சட்டத்தரணி கனகநாயகம் கனகேஸ்வரன் உட்பட மேடையில் இருக்கிற பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் எல்லோரையும் அன்போடு விளித்துக்கொண்டவனாக, இங்கு இந்த நூல் வெளியீட்டுக்குப் பிறகு எனக்கு கதைக்க கிடைத்திருப்பதை ஒரு பாக்கியம் என நினைக்கிறேன்.பாரதியை நேசிக்கிற யாரும் இந்த நூலை வாசிக்கிற போது பாரதியுடைய குணவியல்புகளையும், அவருடைய ஆளுமையின் வித்தியாசமான பக்கங்களையும் இதில்  பார்க்கலாம்.


பாரதி எல்லோரும் சொன்னதைப் போல மிகவும் அமைதியானவர். ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இல்லாத ஓர் ஊடகவியலாளர். மிக நிதான போக்கோடு எல்லாவற்றையும் கையாள்பவர் என்று நாங்கள் அறிந்து வைத்திருந்தாலும் அவர் ஓர் இலட்சியவாதி என்பதை இங்கு பலரும் பலவாறாகச் சொல்லியிருக்கிறார்கள். தமிழர்களின் அரசியல் இலக்கு சம்பந்தமாகச் சரியான ஒரு புரிதலோடும் ,பொறுமையோடும் ஊடகவியலாளர் ஒருவராக மிகச் சாணக்கியமாக தன்னுடைய வாழ்நாட்களைக் கழித்தவர் என்பதை நாங்கள் மிகத் தெளிவாக இதிலே பார்க்கிறோம்.


ஊடகவியலாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பல சந்தர்ப்பங்களில்  சமரசம் செய்ய வேண்டிய கட்டாயம் வரும். ஆனால் அந்த சமரசம் என்பது இரண்டு வகை. இலட்சியத்திற்காக, இலக்கை அடைவதற்காகக் கொஞ்சம் பதுங்கிப் பாயலாம் என்று சமரசம் செய்துகொள்வது அது ஒரு வகை. அடுத்தது சரணாகதி சமரசம். இந்த சரணாகதி சமரசத்துக்கும் பாரதிக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை என்பதை நாங்கள் அவருடைய வாழ்க்கையில் 

பார்க்கிறோம்


அதேபோல மேடையில் இருக்கின்ற எந்த ஊடகவியலாளருக்கும் அப்படியான சரணாகதி சமரசம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்று நான் நம்புகிறேன். இருந்தாலும், ஏனென்றால்  ஊடகத் துறையில் ஊடகச் சொந்தக்காரர்களுக்கு என்றும் ஒர் அரசியல் இருக்கிறது; ஊடக நிறுவனங்களுக்கும் அரசியல் இருக்கிறது. அரசாங்கங்களுடைய பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றுபவருடைய கதி கடும் கஷ்டமான கதி. அதைப் புரிந்துகொண்டுதான் நாங்கள் அவர்களைப் பற்றிப் பேச வேண்டும்.


என்னைப் பொறுத்தமட்டில்,இந்த பாரதியுடைய வாழ்க்கையைப் பார்க்கிறபோது அவர் எப்படியான விஷயங்களிலே சமரசம் செய்து கொண்டார் என்பது முக்கியம்.இங்கு அவருடைய இந்தப் புத்தகத்தில் பலரும் பலவாறாகப் பல விடயங்களை எழுதியிருக்கிறார்கள். அவற்றில், அவருடைய உதவியாளராக அவரிடம் பணிபுரிந்து, அவரிடம் ஊடகம் கற்றுக்கொண்ட பாலசுப்பிரமணியம் கிருபாகரன் ஒரு கதையை எழுதியிருக்கிறார். அதில்  எப்படியெல்லாம் பல விடயங்களைத் தொட்டுப் போயிருக்கிறார். நிறைய விஷயங்களை ஸ்ரீகஜன் எழுதியிருக்கிறார். இது குறிப்பாக அவர் ஆரம்பத்தில்  "ஈழமுரசு" தொடக்கம்- "முரசொலி" தொடக்கம் பிறகு கொழும்புக்கு வந்து 

"வீரகேசரி", "தினக்குரல்"  இறுதியில் திரும்பவும் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு "வீரகேசரி"யின் யாழ்ப்பாணப் பதிப்பு என்றெல்லாம் இவற்றுக்கெல்லாம் அந்தப் பொறுப்பை ஏற்று நடத்துகிற போது அவர் கண்ட சவால்களை, அதேநேரம் சில விடயங்களிலிருந்து அவருக்குத் திருப்தி இல்லாத நேரம் விட்டு விலகிப்போன நிலையும் இருக்கிறது. இவை எல்லாவற்றையும்  சேர்த்துத்துதான் பாரதி என்கிற ஆளுமையின் பல பக்கங்களை நாங்கள் பார்க்கிறோம்.


இதில் கிருபாகரன் மிகத் தெளிவாக எழுதுகிறார். "தினக்குரல்" முகாமை அதனை 'வீரகேசரி "பிரசுரத்திடம் கையளிக்கின்ற சந்தர்ப்பம் வந்தபோது ,முரண்பாடு தோன்றியபோது எல்லோரும் அதற்கு எதிராக நாங்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும், தினக்குரலைத் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் போராடிய போதும் ,

அதிலும் சமரசம் செய்து வைத்தவர் பாரதிதான். அந்த சமரசத்திடைய விளைவுதான் இன்று தமிழ் தேசியத்துக்கு என்று இரண்டு தேசிய நாளிதழ்களை ஒரே நிறுவனம் வெளியிட்டாலும்,  ஒரே இலக்கை நோக்கிப் போவதற்கான அந்தப் பயணத்தில் போட்டி போட்டுக்கொண்டு இருந்த இரண்டு பத்திரிகைகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.


ஏனென்றால் ,சில பொழுது பொருளாதாரக் காரணங்களுக்காகப் பத்திரிகை நடத்துவது என்பது லேசான காரியம் அல்ல. எங்களுடைய மறைந்த தொழிலதிபர் சாமி தனது பத்திரிகையை  ஆரம்பித்த போது அவர் அது ஒரு தியாகமாக நினைத்துதான் அதனைஆரம்பித்திருப்பார். ஆனால் கொண்டு செல்ல முடியவில்லை. வித்யாதரனுக்கு இதில் நிறைய அனுபவம் இருக்கிறது. பத்திரிகையை நடத்திப் பார்த்தால்தான் தெரியும். 


அவர் செய்து கொண்ட சமரசங்கள்.

அதேநேரம் இன்று அவரைப் பற்றிப் பேசுகின்ற போது, அவர் இயற்கையெய்தியதை இட்டு நாங்கள் திருப்தி அடைய வேண்டும். ஏனென்றால், நிறைய பத்திரிகையாளர்களுக்கு இயற்கையெய்த முடியவில்லை. பலவந்தமாக உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன.நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு பலத்த உயிர் அச்சுறுத்தல் நிலவிய காலப் பகுதியில் அப்படியான சூழலில் வாழ்ந்து,40 வருட காலம் தன் ஊடகப் பணியை இவ்வளவு செவ்வனே செய்தார் என்பது மட்டுமல்ல, பலருக்கு உதாரண புருஷராக, ஒரு ஆதர்ஷமாக இருந்துவிட்டுப் போனார் என்பதைக் குறித்துக் கொண்டாடுகிற நிகழ்வாகத்தான் இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது.


எனவே இன்று நாங்கள் நான் சொன்ன மாதிரி இந்த சமரசம் செய்வது என்பது அரசியலில் சில நேரம் அவசியமாகப் போகலாம். ஆனால் சமரசம் செய்யாமல் இருக்கின்ற போது அது உங்களுக்கு நிறைவான அமரத்துவத்தைக் கொண்டு தரும். அதற்கு ஈரானுடைய உயரிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி பெரிய உதாரணம். அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் சமரசம் செய்துகொண்டிருந்தால், "அணுவாயுதத் தயாரிப்பிலிருந்து நாங்கள் விலகப் போகிறோம்" என்று ஏற்றுக்கொண்டிருந்தால் அவர் உயிர் வாழ்ந்திருக்கலாம். ஆனால், அந்தச் சமரசம் செய்யாததன் மூலம் இந்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிபணியாததன் மூலம்,சியோனிச சக்திகளின் இந்தக் கொடுங்கோல் அரசியலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம், அவர்களுக்கு நாங்கள் என்றுமே அவர்களை எதிர்த்துப் போராடுவதற்குத் தயாராக இருக்கிறோம் என்று அந்த கொள்கைப் பிடிப்பில் இருந்த காரணத்தினால்தான் அவர்களுடைய போராட்டம் வரலாற்றில் இடம் பிடிக்கிறது.


அவருடைய காலத்தில் இருந்த எத்தனையோ பேர் உயிர் பலி கொடுத்திருக்கிறார்கள்.  ஆரம்பித்த காலத்திலிருந்து சமரசம் செய்ய விரும்பாதவர்கள். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் ஆரம்பத்தில்  தொடங்கப்பட்டபோது தேர்தலிலும் போட்டியிடுவதில்லை என்று மிகப்பிடிவாதமாக இருந்த ஆரம்ப இயக்கப் போராளிகள் பிறகு தேர்தல் கேட்க துணிந்தார்கள். அதுவும் ஒருவிதமான சமரசம்தான். ஆனால், இலக்கை அடைவதற்கு அவ்வப்போது பதுங்கிப் பாய்வதற்கான ஒரு சமயோசித சமரசம் என்பது அவசியமாகிறது. இதைத்தான் பத்திரிகையாளர்களும் அவ்வப்போது செய்ய வேண்டிய நிர்பந்தம் வருகிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


எனவே ,அந்த அடிப்படையில் இந்தத் தமிழ் பேசும் சமூகங்களின் விடிவு நோக்கிய பயணத்தில் இவருடைய பங்களிப்பை நாங்கள் மறக்க முடியாது. அதேநேரம் அக்கிரமமாக உயிர்பறிக்கப்பட்ட ஏராளமான பத்திரிகையாளர்களைப் பற்றி இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் அவர்களுக்கு என்ன செய்யலாம் என்று நினைக்கிற போது ஒன்றை மட்டும் நான் இங்கு சொல்லிப் போகலாம்.


அதாவது, எத்தனையோ ஆணைக்குழுக்களை அமைத்துவிட்டார்கள். பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடந்த கொடூரங்களை விசாரிப்பதற்கு ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் ; அது தனியாக அதற்கென்று அமைக்கப்பட வேண்டும்.  சகல இனத்தவர்களுக்கும் பொருந்தும் வகையில்  இந்த நாட்டின் இனப்பிரச்சினையில் அது ஒரு பெரிய அக்கிரமமாகப் பார்க்கப்படுகிறது.


கடந்த இரண்டு வருடங்களாகப் பலஸ்தீனத்தில் தான் கூடுதலான ஊடகவியலாளர்கள் பலியாகி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பும் எமது நாடு சர்வதேசத்தில் முதலிடத்தில் இருந்த ஒரு நாடு. எனவே ஊடகவியலாளரின் உயிர்கள் பறிக்கப்பட்டது சம்பந்தமாக ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். 


இன்று உளவுத்துறையின் பிரதான அதிகாரிகள் எல்லாம் கைது செய்யப்படுகிறார்கள். இதன்  பின்னணியில் என்னென்ன சதிகள் நடந்தன என்ற விசாரணைகள்  நடக்கிற அதேநேரம், உயிர்த்த. ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு பின்னால் என்ன சதி நடந்தது என்று பார்க்கின்ற அதேநேரம், இந்த நான்கு ஐந்து தசாப்தங்களாகப் பலியான ஊடகவியலாளர்கள் குறித்த ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு அமைவது இன்றியமையாதது; அவசியமானது. அதன் மூலம் மிகப்பெரும் சரித்திரம் எழுதப்படும். அதற்குப் பின்னால் இருக்கிற சதிகள் அம்பலத்திற்கு வரும் என்பதைச் சொல்லி அன்புடன் விடைபெற்றுக்கொள்கிறேன். நன்றி.


(தொகுப்பு : "விருட்ச வேந்தன்".)

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.