எரிபொருள் வரிசை-யாழ் இந்து கல்லூரி மாணவனின் புதிய கண்டு பிடிப்பு

யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் கருவூலனால் புதிய செயலி கண்டு பிடிப்பு!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அண்மைக்காலமாக ஏற்பட்ட எரிபொருள் வரிசை நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய செயலி தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு விசேட விளக்கமளிக்கப்பட்டது.

இது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06.03.2026) காலை நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நிலவிய எரிபொருள் விநியோகச் சவால்களுக்குத் தொழில்நுட்ப ரீதியான தீர்வுகாண்பது தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறனிடம் விசேட கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. 

இந்தக் கோரிக்கைக்கு அமைவாக, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் மாணவனான ரமேஷநாதன் கருவூலன் இந்தத் தொழில்நுட்பச் செயலியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார்.

இன்றைய கலந்துரையாடலின்போது, இப்புதிய செயலியின் தொழிற்பாடு மற்றும் பயன்பாடுகள் தொடர்பிலான விரிவான முன்னளிக்கையை குறித்த மாணவன் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குச் செய்துகாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, இச்செயலியைப் பொதுமக்கள் பாவனைக்கு ஏற்றவாறு மேலும் எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. 

இனிவரும் காலங்களில், ஏதாவது ஒரு சில பிரதேசங்களில் மாத்திரம் எரிபொருளுக்கான வரிசை நிலைமை ஏற்படும் சந்தர்ப்பங்களில், எரிபொருள் விநியோகத்தை மிகவும் நேர்த்தியாகவும் மக்கள் எவ்வித சிரமங்களுமின்றியும் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இந்தச் செயலியைப் பயன்படுத்த முடியும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மிகக் குறுகிய காலத்துக்குள் இத்தகையதொரு தொழில்நுட்பத் தீர்வை வெற்றிகரமாக உருவாக்கிய மாணவனின் ஆக்கபூர்வமான முயற்சிக்கும், அதனை முழுமையாக ஊக்குவித்த கல்லூரி அதிபருக்கும் ஆளுநர் தனது விசேட பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும், இந்தச் செயலியின் பயன்பாடு மற்றும் முன்னெடுப்புக்கள் தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு வடக்கு மாகாண ஆளுநரால் உத்தியோகபூர்வ கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வட பிராந்திய முகாமையாளர் மற்றும் செயலியை உருவாக்கிய மாணவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.


வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு


கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.