இந்தியாவின் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், குளிர்சாதனப்பெட்டிக்குள் (Fridge) மூன்று மாதக் கருவை இளம் தம்பதி மறைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கேரளாவைச் சேர்ந்த தம்பதியினரிடம் தற்போது தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் வசித்து வரும் 23 வயது இளைஞரும், 28 வயது பெண்ணும் கடந்த ஓராண்டாகத் திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.இவர்களது வீட்டில் சந்தேகத்திற்கிடமான ஏதோ ஒன்று இருப்பதாகக் காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, அந்த குறிப்பிட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, வீட்டிலிருந்த குளிர்சாதனப்பெட்டியில் ஒரு பிளாஸ்டிக் பெட்டிக்குள், சுமார் 3 முதல் 4 மாதங்கள் வளர்ச்சியடைந்த நிலையிலிருந்த கரு ஒன்றைக் காவல்துறையினர் கண்டெடுத்தனர்.விசாரணையின் போது, கடந்த மார்ச் 20ஆம் திகதி இரவு குறித்த பெண்ணுக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாகவும், அப்போது கழிவறையில் வைத்துத் தானாகவே கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செவிலியர் பயிற்சி பெற்று வரும் அந்தப் பெண், ஒரு கத்தரிக்கோல் கொண்டு தொப்புள் கொடியைத் தானே வெட்டியுள்ளார்.பின்னர், அந்தக் கருவை என்ன செய்வதென்று தெரியாத காரணத்தால், அதனைப் பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து பிரீஸருக்குள் மறைத்து வைத்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சந்தேக மரணம் மற்றும் சட்டவிரோதமாகக் கருவை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
