நாட்டில் 37 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்றும் தொடர்ச்சியாக இடம்பெறுவதோடு, நாளை பௌர்ணமி தினத்திலும் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “சாதாரணமாக இந்நிலைமை உருவாவதற்கு முன்னர், இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு விடுமுறை தினமாகும்.நீண்ட வார இறுதி விடுமுறை என்பதால், ஐஓசி (IOC) நிறுவனம் ஏற்கனவே தீர்மானித்தபடி வழமை போலவே எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கும்.
பொதுவாக பௌர்ணமி தினங்களில் எரிபொருள் போக்குவரத்து இடம்பெறுவதில்லை என்றாலும் முன்னரே தீர்மானித்தபடி நாளை (02-03-2026) எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இதற்காகத் தேவையான அளவு பௌசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
எரிபொருள் தொடர்பாக எந்தவித தேவையற்ற அச்சமும் கொள்ள வேண்டியதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
