யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு 8.30 மணியளவில் கொடிகாமம் நாவலடிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த குடும்பஸ்தர் முந்திச் செல்ல முற்பட்ட வேளை மிருசுவில் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த உழவு இயந்திரத்தின் பெட்டிப்பகுதியில் மோட்டார் சைக்கிளின் ஒரு பகுதி மோதுண்டு பின்னர் பேருந்துடன் மோதுண்டதில் இந்தக் கோர விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது தலைப்பகுதியில் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்.வயாவிளான் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 41 வயதான இரத்தினராசா ரஜிகாந்தன் என்பவராவார்.
சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து குறித்த பேருந்து தப்பியோடியுள்ள நிலையில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
