பசறை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய, பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தலைமறைவாக இருந்த சந்தேக நபர் ஒருவர், செவ்வாய்க்கிழமை (17) அன்று மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை, கமேவெல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவி, தனது வீட்டிற்கு அருகில் உள்ள 51 வயதுடைய சந்தேக நபரின் வீட்டிற்கு சென்றிருந்த போதே பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் பசறை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் பின்னர், சந்தேக நபர் பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவி நன்னடத்தை திணைக்களத்தினால் பசறையில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் மீண்டும் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த போதும், அவர் பசறையிலிருந்து மொனராகலைக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று, சந்தேக நபர் குறித்த மாணவியை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு, பாடசாலைக்கு அருகாமையில் வைத்து பாடசாலை சீருடையுடனே மாராவ பிரதேசத்தில் உள்ள ஒரு வீடொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேக நபர் மொனராகலை, போஹிட்டிய மாராவ பிரதேசத்தில் மறைந்திருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, மொனராகலை பொலிஸார் அவரைச் சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர். இதன்போது அங்கிருந்த மாணவியும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், மீட்கப்பட்ட மாணவியும் மேலதிக விசாரணைகளுக்காக மொனராகலை பொலிஸாரினால் பசறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
