குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 'வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின்' கீழ் மொத்தம் 31,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எச்.எம். சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஆறு அமைச்சுகள் இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இலக்கு வைத்து 'நேரடி உதவித் திட்டத்தின்' கீழ் 25,000 வீடுகள் கட்டப்படவுள்ளன.
வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் 10,000 குடும்பங்களுக்கு உதவுவதற்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
குறித்த திட்டத்தின் முதற்கட்டம் ஜனவரி 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி முன்னிலையிலும், இரண்டாம் கட்டம் ஜனவரி 28 அன்று காலி மாவட்டத்தில் பிரதமர் முன்னிலையிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பெப்ரவரி 25ஆம் திகதி, 13 மாவட்டங்களில் 1,500 குடும்பங்களுக்கு 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
முதற்கட்டக் கொடுப்பனவுகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 10,000 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் இலக்கு 2026 நவம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
