அரசாங்கத்தின் பிரஜா சக்தி அமைப்பு திருகோணமலை மாவட்டத்தில் காணப்படுகின்ற கச்சேரி, பிரதேச செயலகங்கள் பெலவத்தை காரியாலயத்தின் ஒரு கிளையாக உருவாக்கப்பட்டு, அதன் மூலம் அரசியல் செய்துவருகிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (8) இடம்பெற்ற மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாடடின் ஒவ்வொரு பிரதேசத்திலும் காணப்படுகின்ற பிரஜா சக்தி என்ற அமைப்பு எந்த அடிப்படையில், எப்படி அமைக்கப்படுகின்றன என்ற கேள்வி காணப்படுகிறது. இந்த பிரஜா சக்தி என்ற அமைப்பு ஒவ்வொரு மாவட்ட செயலகத்துக்கும் ஒரு தலைமைத்துவம் வழங்கப்படுகிறது.
இந்த தலைமைத்துவம் யாருக்கு, எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என சிந்திக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியில் கடந்த உள்ளூராட்சி மன்றத்தில் போட்டியிட்டவர்கள் ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் கட்சி ரீதியாக செயற்பட்டு, தங்களது கட்சியை வளர்க்கும் செயற்பாடே பிரஜா சக்தி ஊடாக இடம்பெறுவதை காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நடவடிக்கை எந்த அரசியல் கட்சிகளாலும் வேறு எந்த காலத்திலும் மேற்கொள்ளப்படாத வகையிலே அரசியல் செய்து வருகிறார்கள்.
அதனால் இதனை பிரஜா சக்தி என தெரிவிப்பதற்கு பதிலாக தேசிய மக்கள் சக்தியின் ஒரு கிளை என்றே தெரிவிக்க வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தில் காணப்படுகின்ற கச்சேரி, பிரதேச செயலகங்கள் பெலவத்தை காரியாலயத்தின் ஒரு கிளையாகவே உருவாக்கப்பட்டு, அதன் மூலம் அரசியல் செய்துவருகிறார்கள்.
ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்றும் அரசியலைவிட மக்களுக்காக சேவை செய்வோம் என்று தெரிவித்து ஆட்சிக்கு வந்த நீங்கள், ஊடகங்களில் கருத்துக்களை தெரிவிப்பதை கைவிட்டு, உங்களின் செயற்பாட்டின் மூலம் மக்களுக்கான நல்ல சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
