மற்றொருவருக்குச் சொந்தமான வீட்டைத் தனக்குச் சொந்தமானது எனக் கூறி, மூன்றாவது நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவருக்கு, ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று தீர்ப்பளித்தார்.
இந்த ஒரு வருட தண்டனையில், ஏழு மாதங்களைச் சாதாரண சிறைத் தண்டனையாக அனுபவிக்க வேண்டும் எனவும், ஏனைய ஐந்து மாதங்களை பத்து வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையாகவும் நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த 2018ஆம் ஆண்டு, குறித்த சந்தேக நபர் தமக்குச் சொந்தமில்லாத வீடொன்றை, அதன் உரிமையாளர் தாம்தான் எனப் பொய் கூறி முறைப்பாட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார்.

எனினும், அந்த வீடு வேறொருவருக்குச் சொந்தமானது என்பது பின்னர் தெரியவந்தது.
இது குறித்த தகவல் கிடைத்ததும், வீட்டின் உண்மையான உரிமையாளர் அங்கு வசிப்பவர்களிடம் தான் தான் உண்மையான உரிமையாளர் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளின் போது, வீட்டின் வாடகைப் பணம் முழுவதையும் அந்தப் பெண்ணே பெற்றுக்கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பினர் 2018ஆம் ஆண்டில் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தனர்.
நீண்டகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் போது, இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
எஞ்சியிருந்த பிரதான சந்தேகநபரான குறித்த பெண்ணுக்கு எதிரான சாட்சியங்களை ஆராய்ந்த நீதிமன்றம், உரிமையாளர் அல்லாத ஒருவர் சட்டவிரோதமான முறையில் சொத்தை குத்தகைக்கு விட்டமை பாரிய மோசடி எனக் கூறி அவரை குற்றவாளியாக அறிவித்தது.
முறைப்பாட்டாளரோ அல்லது வீட்டின் உண்மையான உரிமையாளரோ குறித்த பெண்ணிடமிருந்து எவ்வித நட்டஈட்டையும் எதிர்பார்க்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
குறித்த பெண் இதற்கு முன்னரும் இது போன்ற பல நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், பல வருடங்களாகப் பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.