பாடசாலை மாணவர்களுக்கு மதன மோதக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் மொனராகலை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (01) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நடைபெற்ற உலக சிறுவர் தின விசேட நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்காக பொலிஸ் அதிகாரிகள் சிலர் அங்கு சென்றுள்ளனர்.
இதன்போது அந்த பாடசாலையில் உள்ள மாணவர்களின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகமடைந்த பொலிஸார், மாணவர்களை விசாரித்துள்ளனர்.
விசாரணையில் மாணவர்கள் மதன மோதக போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த மேலதிக தகவலின் பேரில் மொனராகலை நகரத்தில் உள்ள கடை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பாடசாலை மாணவர்களுக்கு மதன மோதக போதை மாத்திரைகளை விற்பனை செய்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பெண் 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான பெண்ணிடமிருந்து 176 மதன மோதக போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட பெண் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.