புங்குடுதீவு பகுதியில் உள்ள வெற்றுக் காணிகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் துப்புரவு செய்யாவிட்டால் அவை அரசுடமையாக்கப்படும் என அங்குள்ள காணிகளில் வேலணை பிரதேசசபையால் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
புங்குடுதீவு சபேரியார் ஆலயம் முதல் - பிள்ளையார் ஆலயம் வரையான பகுதியில் உள்ள காணிகளுக்கு மேற்படி விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த விளம்பரத்தில் ,
இக்காணியில் உள்ள பற்றைகள் மற்றும் நீர் தேங்கும் இடங்களை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன் அகற்றி துப்புரவு செய்யாவிடின் “2007 ஆம் ஆண்டு 11ஆம் இலக்க டெங்கு பெருக்க தடுப்புச் சட்டத்தின் பிரகாரம்” சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இவ்வாதனம் அரச உடமை ஆக்குவதற்கு முன்னறிவித்தல் இன்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனையும் இத்தால் அறியத்தருகின்றேன் என்று வேலணை பிரதேச சபை தவிசாளர் அறிவித்தல் விடுத்ததாக விளம்பரத்தில் உள்ளது.
மேலும் புங்குடுதீவில் உள்ள துப்பரவற்ற அனைத்துக் காணிகளிலும் விளம்பரம் ஒட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணிகள் துப்பரவு செய்யப்படாமல் நீர் தேங்கிநிற்கும் பிரதேசங்களில் டெங்கு பரவல் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.