திருகோணமலை மூதூர் பிரதேசத்தின் பெரியபால பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
நேற்று (06) மாலை 2.30 மணி அளவில், பெரியபாலம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வளர்ப்பு தாய் நோய்களுக்காக பயன்படுத்தி வந்த மருந்துகளை அதிக அளவில் அருந்திய நிலையில், மாணவி கடுமையாக பாதிக்கப்பட்டார்.
உடனடியாக அவர் மூதூர் தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் இன்று (07) அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவியின் உடல் மூதூர் பொலிஸாரின் மேற்பார்வையில் திருகோணமலை மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியிடம் மதியம் 12.00 மணியளவில் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக குடும்பத்தாரிடமும் சகோதர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் போது, இது காதல் தொடர்பான பிரச்சனையொன்றுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகவே, வளர்ப்பு தாயார் பயன்படுத்தும் நீரிழிவு நோய் மற்றும் நடுக்கத்திற்காக பாவிக்கும் மருந்துகளை மாணவி அதிகமாக அருந்தியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான முழுமையான உண்மை தகவல்கள், சட்ட வைத்தியரின் அறிக்கை வருகைக்குப் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.