திருப்பூர் மாவட்டம், அவிநாசி செவூரைச் சேர்ந்த ரிதன்யா என்ற மணப்பெண், திருமணமாகி 78 நாட்களிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரிதன்யா, திருமணமாகி 78 நாட்களுக்குள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகியதாகவும், இதற்கு கணவர், மாமனார், மாமியார் ஆகிய மூவரே காரணம் எனவும் தனது இறுதி ஆடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வரதட்சணை கொடுமை, இரவு முழுவதும் உடலுறவு தொல்லை, உள்ளிட்ட காரணங்களால் அவர் தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ, வழக்கில் முக்கிய ஆதாரமாக உள்ளது.
ரிதன்யாவின் தந்தை, மகள் மணமகன் வீட்டில் துன்புறுத்தப்படுவதாக முன்பே தெரிவித்திருந்தாலும், "பேசி தீர்த்துக்கொள்ளலாம்" என அறிவுறுத்தியதாகவும், இது போதுமான அளவு உறுதியாக இல்லை எனவும் தமிழ்வேந்தன் சுட்டிக்காட்டினார்.
தமிழ்வேந்தன், இந்த வழக்கு 100% குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதியாகும் என திட்டவட்டமாக கூறினார்.
வரதட்சணை கொடுமை (IPC 304B), பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் (IPC 498A), மற்றும் உள்நாட்டு வன்முறைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குறைந்தபட்சம் 10 - 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் எனவும், மொத்தமாக 30 ஆண்டுகள் வரை தண்டனை பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரிதன்யாவின் தற்கொலை முடிவு குறித்து வருத்தம் தெரிவித்த தமிழ்வேந்தன்,
'அவர் காரை ஓட்டி வீட்டிற்கு வந்து, நடந்தவற்றை கூறி, பொலிஸாருக்கு புகார் அளித்திருந்தால், இந்த முடிவு தவிர்க்கப்பட்டிருக்கலாம்' என குறிப்பிட்டார்.
மேலும், பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக போராட வேண்டும், தற்கொலை ஒரு தீர்வாகாது எனவும் அவர் வலியுறுத்தினார்.