மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயார் கீழே விழுந்து மயங்கிய நிலையில் இன்றைய தினம் (27) உயிரிழந்துள்ளார். ஈச்சமோட்டை வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ஜீவராசா மேரிதெரேசா (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 19 ஆம் திகதி ஊர்காவற்றுறையில் உள்ள தனது வீட்டினை பார்ப்பதற்கு மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதன்போது ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு முன்பாக இடது பக்கமாக ஒருவர் துவிச்சக்கர வண்டியில் வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பிரேக்கினை அழுத்திய வேளை பின்னாலிருந்த குறித்த பெண் திடீரென கீழே விழுந்து மயங்கியுள்ளார். பின்னர் ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.