திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே இருக்கிறது வேலகவுண்டன்பட்டி. இந்த கிராமத்தில் 43 வயதாகும் பீமராஜ் கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். அவருடைய மனைவி ரேவதி (40). இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் கண்ணன் என்ற மகனும், 2 வயதில் சந்தானம் என்ற மகனும் உள்ளனர். இதில், கண்ணன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தான். செம்பட்டி அருகே வீ.கூத்தம்பட்டியில் ரேவதியின் தந்தை தங்கவேலின் (60 வயது) வீடு இருக்கிறது. தங்கவேல் தனது வீட்டை இடித்துவிட்டு, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் வீட்டின் அருகே குடிசை அமைத்து, அதில் தங்கவேல் தங்கி இருக்கிறார்.
இந்தநிலையில் குழந்தை கண்ணன், தனது தாத்தா வீட்டுக்கு சென்றான். நேற்று முன்தினம் இரவு தங்கவேல், கண்ணன் ஆகியோர் குடிசை வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளார்கள். நள்ளிரவில் திடீரென கண்ணன் அலறினான். அந்த சத்தம் கேட்டு தங்கவேல் திடுக்கிட்டு எழுந்திருக்கிறார். சிறிதுநேரத்தில் கண்ணனின் வாயில் இருந்து நுரை தள்ளியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கவேல் கண்ணனின் தந்தை பீமராஜிக்கு தகவல் தெரிவித்தார். அவரும் அங்கு விரைந்தார்.
பின்னர் அவர்கள், கண்ணனை, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கொடிய விஷம் கொண்ட பாம்பு கண்ணனை கடித்திருப்பதாக கூறினார்க்ள, தொடர்ந்து அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் கண்ணன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து செம்பட்டி காவல் நிலையத்தில் பீமராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடிசைக்குள் பதுங்கி இருந்த பாம்பு கடித்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் செம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.