முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சட்டவிரோதமாகப் பெற்ற 50 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகக் காணி வாங்கியதாகக் கூறப்படும் வழக்கு விசாரணையில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாற்காலியில் இருந்து விழுந்ததால் ஏற்பட்ட முதுகுத்தண்டு மற்றும் நரம்புப் பிரச்சினைகளுக்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாக ராஜபக்க்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆறு மாதங்களுக்கு விமானப் பயணத்தைத் தவிர்க்குமாறு அமெரிக்க வைத்தியர் அவருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பு கூறியுள்ளது.
மாத்தறை, பிரவுண்ஸ் ஹில்லில் உள்ள 1.5 ஏக்கர் காணி, சட்டவிரோத நடவடிக்கைகளினால் பெறப்பட்ட பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு இதுவாகும். ராஜபக்க்ஷ மற்றும் அவரது மைத்துனி அயோமா கலப்பத்தி உட்பட மூவர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
மே 23ஆம் திகதி, பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால், ராஜபக்க்ஷவும் கலப்பத்தியும் ஆஜராகவில்லை. ராஜபக்ஷவின் பயணக் காலம் முடிவடைந்துவிட்டதாகவும், மருத்துவ விளக்கம் நம்பத்தகுந்ததாக இல்லை என்றும் கூறி, அவரது பிணையை இரத்துச் செய்து பிடியாணை பிறப்பிக்குமாறு சட்டத்தரணிகள் கோரினர்.
முன்னதாக ராஜபக்க்ஷ நீதிமன்ற ஆஜர்களில் ஒத்துழைப்பு அளித்ததைக் காரணம் காட்டி, நீதவான் அருண புத்ததாச அக்கோரிக்கையை நிராகரித்ததுடன், அடுத்த விசாரணையின் போது அவர் சமூகமளிக்குமாறும் உத்தரவிட்டார்.