தென்னிலங்கையின் அம்பலாங்கொடை, கொஸ்கொடை பிரதேசத்தில் பொலிஸ் தடுப்புக் கூண்டில் இருந்த இளைஞன் ஒருவர் மர்மமாக உயிரிழந்துள்ளார்.
கொஸ்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கடுமையாக போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகியிருந்த நிலையில், நேற்றையதினம்(01.05.2025) அவரது குடும்பத்தினரே பொலிஸாரிடம் குறித்த இளைஞரை ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இளைஞரை பொலிஸார் மூலம் புனர்வாழ்வுக்கு அனுப்புவதே குடும்பத்தினரின் நோக்கமாக இருந்துள்ளது.
எனினும், நேற்றிரவு கொஸ்கொடை பொலிஸ் நிலைய தடுப்புக் கூண்டில் இருந்த இளைஞன், திடீரென்று சுகவீனமுற்ற நிலையில் பலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் ஒப்படைத்த இளைஞன் மீது பொலிஸார் மேற்கொண்ட கடுமையான தாக்குதல் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.