தேசிய மக்கள் சக்திக்கோ தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஈ.பி.டி.பி ஆதரவு வழங்காது..!


தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முயலும் தேசிய மக்கள் சக்திக்கோ, சொல்லுக்கும் செயலுக்கும்  சம்மந்தமில்லாத தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவில்லை என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், காத்திரமான எதிர்தரப்பாக உள்ளூராட்சி சபைகளை எதிர்கொள்ளவே கட்சி தீர்மானித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தி்ல் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எமக்கு வாக்களித்த அனைவருக்கும் முதலில் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த தேர்தல் முடிவுகள் எம்மை பொறுத்தவரையில்  ஏமாற்றங்களையோ ஆச்சரியங்களையோ ஏற்படுத்தவில்லை.

காரணம், வித்தியாசமான  அரசியல் சூழலிலேயே நாங்கள் இந்த தேர்தலை எதிர்கொண்டிருந்தோம். எந்த விதமான அரசியல் அதிகாரங்களும் அற்ற நிலையில், எம்மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களும், எமது செயலாளர் நாயகம் கைது செய்யப்படப் போகின்றார் என்ற ஆதாரமற்ற  வதந்திகளும்  ஒரு புறம் பரப்பப்பட்டுக் கொண்டிருக்க,  மறுபுறத்தில் வழமைபோன்று எமக்கு எதிரான சேறடிப்புக்களும் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த தேர்தலை எதிர்கொண்டிருந்தோம். இந்நிலையில் எமக்கு 20,000 இற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இது எமது மக்கள் எமது வேலைத்திட்டங்களையும் எமது நடைமுறைச் சாத்தியமான அரசியல் அணுகுமுறைகளையும் ஆதரிக்கின்றார்கள் என்ற செய்தியையே வெளிப்படுத்தி இருக்கின்றது. அந்தவகையில், இந்த தேர்தல் முடிவினை  பின்னடைவிலும் ஒரு வெற்றியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இந்நிலையிலே உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் எமது நிலைப்பாடு பற்றிய கேள்வி பல்வேறு தளங்களில் தற்போது பேசு பொருளாக காணப்படுகின்றது.

எம்மை பொறுத்த வரையில்,  தேசிய மக்கள் சக்தியும், அதேபோன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தவிர்ந்த தரப்புக்கள் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க எமது ஒத்துழைப்பு அவசியம் எனக் கருதி எம்மை அணுகும் பட்சத்தில் அவை தொடர்பாக சாதகமாக பரீசிலிக்க தயாராக இருக்கின்றோம். அவ்வாறான தேவை ஏற்படாத பட்சத்தில், ஆரோக்கியமான எதிர்தரப்பாக உள்ளூராட்சி மன்றங்களில் தனித்துவமாக மக்கள் நலன்சார்ந்நு  செயற்படுவதற்கு  ஆர்வமாக இருக்கின்றோம். 

தேசிய மக்கள் சக்தி என்று சொல்லிக் கொள்ளுகின்ற ஜே.வி.பி. கட்சியினருக்கு ஆதரவு தெரிவிக்க மறுப்பதற்கு இனவாதமோ, இன ரீதியான சிந்தைகைளோ காரணம் இல்லை என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

எம்மை பொறுத்தவரையில், எமது மக்களுடைய அபிலாசைகளை  வென்றெடுப்பதற்கும், எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை தீர்வுகாண்பதற்கும் தேசிய நல்லிணக்கம் அத்தியவசியமானது என்பதை உறுதியாக நம்புகின்றோம்.

அதற்காக கடந்த 35 வருடங்களாக தொடர்ச்சியாக உழைத்தும் வருகின்றோம். கடந்த காலங்களில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த தென்னிலங்கை அரசாங்கங்கள், எமது தேசிய நல்லிணக்க அணுகுமுறையின் அவசியத்தை புரிந்து கொண்டு சாதகமான தமது பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்தி வந்தன. ஆனால் தற்போதைய அரசாங்கத்தினரிடம் தேசிய நல்லிணக்கத்தின் அவசியம் பற்றிய புரிதல் கொஞ்சமும் இல்லை என்பதை அவர்களுடைய செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. 

அதுமாத்திரமன்றி, அனைவரும் இலங்கையர், எல்லோருக்கும் சமத்துவம் போன்ற வார்த்தைகள் மூலம், எமது தனித்துவங்களையும் அடையாளங்களையும் நீர்த்துப் போகச் செய்து, வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம், தமிழர்கள் தேசிய இனம் போன்றவற்றுக்கான அடிப்படைகளை இல்லாமல் செய்வதற்கான ஆழமான நிகழ்ச்சி நிரலோடு செயற்படுகின்றார்கள் என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்துகின்றது. இந்நிலையிலேயே ஜே.வி.பி. யினருக்கு ஆதரவளிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளோம்.

அதேபோன்று, வெளிப்படைத் தன்மையோடு நடைமுறைச் சாத்தியமான அரசியலை முன்னெடுக்கின்ற தனித்துவமான அரசியல் தரப்பான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம்,   சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமில்லாமல், நடைமுறைச் சாத்தியமற்ற வெறும் வீராப்பு அரசியலை முன்னெடுத்து வருகின்ற தமிழ் தேசிய முன்னணியினருக்கு ஆதரவளிப்பதும் நடைமுறையில் சாத்தியமற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரைப் பொறுத்த வரையில் இப்போதுகூட  கொள்கை ரீதியான உடன்பாடு கொள்கை ரீதியான கூட்டிணைவு  என்று திரும்ப திரும்ப சொல்லி வருகின்றார்கள். அவர்களுடைய கொள்கை என்ன என்பது அவர்களுக்கே விளங்க வில்லை என்பதையே அவர்களின் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.

உதாரணமாக  தூய நகரம் தூய்மையான நிர்வாகம் என்கிறார்கள். கடந்த மாகாண சபையிலே ஊழல் மோசடியில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டவர்களையும், கடந்த காலங்களில் நிதி நிறுவனம் நடாத்தி எமது மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் என்ற வலுவான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர்களையும் இணைத்து வைத்துக் கொண்டு தூய்மையான நிர்வாகம் பற்றி பேசுகிறார்கள்.

ஒற்றையாட்சியையும் எக்கிய இராச்சியத்தினையும் நிராகரிக்கின்றோம் என்று கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்யாத கட்சிகளோடு ஒட்டவும் மாட்டோம் உறவாடவும் மாட்டோம் என்கிறார்கள்.  எக்கிய இராச்சியம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்க ஆதரவு கொடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை அரவணைத்து உறவாடிக் கொண்டு, குறித்த அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு பங்களிப்பு செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்தனுடனும் செல்வம் அடைக்கலநாதனுடனும் டீல் பேசுகின்றனர்.

இன்னொமொரு வேடிக்கை என்னவென்றால்,  ஈ.பி.டி.பி. தமிழ்  தேசிய பரப்பில் செயற்படாத கட்சியாம். எங்களோடு பேசுவது தங்களுடைய கொள்கைக்கு மாறான செயற்பாடாம்.

ஆனால்,ஈ.பி.ஆர்.எல்.எப். புளொட், ரெலோ, சமத்துவக் கட்சி உள்ளங்கிய ஜனநாயகக் தமிழ் தேசியக் கூட்டணியோடு பேசுவார்களாம். அவர்கள் தமிழ் தேசியப் பரப்பிலே செயற்படுகிறார்களாம்

தமிழ் தேசியத்திற்கு புறம்பான தரப்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அடையாளப்படுத்துகின்றவர்கள், 2015 ஆம் ஆண்டு வரையில் எமது கட்சியை வழிநடத்திய தலைவர்களுள் ஒருவரான தோழர் அசோக் என்று அறியப்பட்ட சந்திரகுமாருடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளை அமைக்க டீல் பேசுகின்றனர்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களோடு இணக்க அரசியலில் ஈடுபட்டமையினால் ஈ.பி.டிபி. ஒட்டுக் குழுவாம். தென்னிலங்கை அரசாங்கத்தோடு இணக்க அரசியல் செய்கின்ற கட்சி ஒட்டுக் குழு என்றால், டி.எஸ் சேனநாயக்கா காலத்திலேயே இணக்க அரசியல் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தானே  Most senior ஒட்டுக்குழு நீங்கள் தானே!

இவ்வாறு தங்களுடைய செயலுக்கும் சொல்லுக்கும்  சம்மந்தமில்லாமல் செயற்பட்டுக் கொண்டு, மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருந்து சுயலாப அரசியல் செய்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஆதரவளிப்பதும் சாத்தியமற்றது என்ற அடிப்படையிலேயே எமது தீர்மானம் அமைந்திருக்கின்றது.


கருத்துரையிடுக

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் .

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.