தமிழகத்தின் பல்லாவரம் அருகே வேறொரு ஆணுடன் உறவு வைத்திருந்ததால் கல்லால் சரமாரியாக தாக்கி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த மாநகராட்சி ஊழியரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் கவுரி அவென்யூ 2ஆவது தெருவை சேர்ந்தவர் ஞானசித்தன் (40). இவர், தாம்பரம் மாநகராட்சியில் லொறி சாரதியாக பணிபுரிந்து வருகிறார். திருமணம் ஆகாத நிலையில், தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவருக்கும், அனகாபுத்தூர் அருள் நகர் 3ஆவது தெருவை சேர்ந்த பாக்கியலட்சுமி (33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாக்கியலட்சுமி ஏற்கனவே கணவரை விவாகரத்து செய்துவிட்டு, தனது 2 பிள்ளைகளுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். ஞானசித்தனுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஞானசித்தன், பாக்கியலட்சுமியை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இந்நிலையில் பாக்கியலட்சுமிக்கு ஞானசித்தன் தவிர மற்றொரு ஆண் நபருடனும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த ஞானசித்தன், இன்று அதிகாலை மற்றொரு ஆணுடன் தொடர்பு குறித்து பாக்கியலட்சுமியிடம் கேட்டுள்ளார். அதற்கு பாக்கியலட்சுமி, நான் யாரிடம் தொடர்பில் இருந்தால் உனக்கு என்ன? என கூறியுள்ளார். இதனால் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஞானசித்தன், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வந்து பாக்கியலட்சுமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், நிலைகுலைந்த பாக்கியலட்சுமி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இதனால் பயந்துபோன ஞானசித்தன், சங்கர்நகர் பொலிஸ் நிலையம் சென்று, நடந்த சம்பவம் குறித்து கூறி சரணடைந்தார். பின்னர், பொலிஸார் அவரை கைது செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், இறந்து கிடந்த பாக்கியலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் விவகாரத்தில் பாக்கியலட்சுமியை கொலை செய்தாரா? அல்லது கொடுக்கல், வாங்கல், சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டாரா? இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.