கேகாலையில் போதைப்பொருள் பாவனைக்கு பணம் தர மறுத்ததால், மகன் தன் தாயின் இரு கால்களிலும் தடியால் அடித்து எலும்புகளை முறித்துள்ளார்.
கடந்த 26ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேவலகமவை சேர்ந்த 46 வயதான பெண் கேகாலை பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
அப்பெண்ணுக்கு 20 வயதான மகன் உள்ளார் எனவும் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த இளைஞன், நண்பர்களுடன் போதைப்பொருள் நுகர்வதற்காக தன் தாயிடம் பணம் கேட்டு வந்துள்ளார். மகனின் அச்சுறுத்தல் காரணமாக சில சமயங்களில் தாய் பணம் கொடுத்து வந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று குறித்த இளைஞன் மீண்டும் தன் தாயிடம் 5,000 ரூபாய் கேட்டதாகவும், தன்னிடம் பணம் இல்லை என அவரிடம் கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் கோபமடைந்த மகன் தன் கைகளில் கிடைத்த பொருட்களால் தாயைத் தாக்கியதாகவும், இறுதியாக தடியொன்றினால் தாயின் இரு கால்களிலும் அடித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் முச்சக்கர வண்டி மூலம் கேகாலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சந்தேக நபரான மகனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
