கொழும்பு பொரளை மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) இரவு திடீரென வன்முறை மற்றும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இரவு 10.20 மணியளவில் சிறைச்சாலையின் 'E' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று, திடீரென அந்தப் பிரிவிலிருந்து வெளியேறி வன்முறையில் ஈடுபட்டதையடுத்து இந்த அமைதியின்மை ஆரம்பமாகியுள்ளது. போதைப்பொருள் தொடர்பான தகராறே இந்த மோதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார், பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) உடனடியாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தற்போது இந்த அமைதியற்ற நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
