இலங்கையின் கட்டுமானத் துறை எதிர்கொண்டு வரும் தடைகளை நீக்கி, அந்தத் துறையை மீளச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கட்டுமானத் துறை பொருளாதார நடவடிக்கைகளுக்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் நேரடியாக பங்களிப்பு செய்வதால், அதன் வளர்ச்சியை மீள ஏற்படுத்துவது அவசியம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கட்டுமானத் துறையின் முக்கிய தரப்பினருடன் நேற்று (செப்டம்பர் 30) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, கட்டுமானத் துறையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலப் போக்குகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், தற்போது காணப்படும் தடைகளை நீக்கி, துறையின் நிலையான வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகளும் தொழில்துறை பிரதிநிதிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.
கட்டுமானத் துறை எதிர்கொண்டு வரும் முக்கிய சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளனர்.
மேலும், குறித்த பிரச்சினைகளுக்கு விரைவானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வுகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தலையீடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு தீர்வு காண்பதுடன், அந்தத் துறையில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அதிகாரிகளும், கட்டுமானத் துறை பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
