கச்சா எண்ணெய் விலையில் சரிவு!

 

சவூதி அரேபியா மீதான தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோக அபாயங்கள் மற்றும் ரஷ்யாவிடமிருந்து மேலதிக டீசல் விநியோகம் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து சந்தை வர்த்தகர்கள் மதிப்பீடு செய்த நிலையில், கச்சா எண்ணெய் விலைகள் இன்று (13) அதிகாலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளன.

பிரென்ட் ரக கச்சா எண்ணெயின் எதிர்கால ஒப்பந்த விலை 0.57 சதவீதம் குறைந்து, ஒரு பீப்பாய் 106.04 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) ரக கச்சா எண்ணெயின் விலை 0.5 சதவீதம் குறைந்து, ஒரு பீப்பாய் 93.27 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது.

இதற்கு முன்னதாக, திங்கட்கிழமை பிரென்ட் ரக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 106.65 அமெரிக்க டொலராக நிறைவடைந்தது. இது செப்டம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான உயர்ந்த விலையாகும்.

உலகச் சந்தைகளுக்கு டீசல் விநியோகிக்க ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ரஷ்ய எரிபொருள் மீதான அமெரிக்கத் தடைகளை அவரது நிர்வாகம் தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது.

இந்த நடவடிக்கையால் உலகளாவிய எரிபொருள் சந்தையில் நிலவும் விநியோகப் பற்றாக்குறை குறைவதுடன், கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி வந்த விநியோகக் கவலைகளும் தணியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா முடிவுக்குக் கொண்டுவரும் வரை அந்நாட்டின் எரிபொருள் இறக்குமதியைத் தடை செய்யும் அமெரிக்கச் சட்டத்தை இந்த நடவடிக்கை மீறக்கூடும் என இரு கட்சிகளையும் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Post a Comment