சற்று முன்னர் கைதானார் ஞானசார தேரர்


இஸ்லாம் மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் பிடியாணை பிறப்பித்துள்ளன.

இப்பிடியாணைகள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய நாட்களில் பிறப்பிக்கப்பட்டன. 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் மன்னிப்பை நீதிமன்றம் இரத்து செய்து இரண்டு வாரங்களின் பின்னரே, மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த திறந்த பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.

அத்துடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் தேரருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையை விதித்துள்ளதோடு, இக்கட்டுப்பாடு குறித்து குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

தேரர் சுகவீனமுற்றுள்ளதாக மருத்துவ அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட அதேவேளை, அவரது பிணையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினர். 

தனது பிணையாளி இவ்வழக்கை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகவும், அது தொடர்பில் சட்டமா அதிபரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது சட்டத்தரணி அசோக வீரசூரிய நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

இருப்பினும், அனைத்துச் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையையிட்டு தான் திருப்தியடையவில்லை எனக் குறிப்பிட்டார். 

மேலும் பிணையாளர்கள் ஆஜராகத் தவறியமையையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இதனையடுத்தே, ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். 

பரிசுத்த குர்ஆன் குறித்து ஞானசார தேரர் தெரிவித்த கருத்துக்கள் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, தண்டனைச் சட்டக்கோவையின் விதிகளின் கீழ் சட்டமா அதிபரால் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment