சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்திற்கு இரண்டு நாட்களை ஒதுக்குமாறு கோரிக்கை விடுக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
இதற்காகப் பாராளுமன்ற செயற்பாட்டுக் குழுவிடம் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளது.
சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணையில் மொத்தம் 50 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆரம்ப வழிகாட்டல்களுக்கு அமைய, அதிக எண்ணிக்கையிலான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய நம்பிக்கையில்லாப் பிரேரணையாக இது அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
