இலங்கையின் தேசிய எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே அரசாங்கத்தின் அடுத்த முக்கிய சவாலாகும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சேமிப்பு கொள்ளளவின் அடிப்படையில், இலங்கையில் சுமார் 23 முதல் 25 நாட்களுக்கு மட்டுமே போதுமான எரிபொருள் உள்ளதாகவும், இது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து நிச்சயமற்ற தன்மையை உருவாக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
'எனவே, குறைந்தபட்சம் 45 நாட்கள் அல்லது ஒன்றரை மாதத்திற்கான சேமிப்பு கொள்ளளவை பராமரிக்கும் வகையில், குழாய் அமைப்புகளை விரிவாக்கவும், எரிபொருள் இறக்கும் நேரத்தைக் குறைக்கவும், 100,000 கனமீட்டர் கொள்ளளவு கொண்ட தாங்கி அமைப்புகளை நிறுவவும் நாம் திட்டங்களைத் தொடங்கியுள்ளோம்.'
'அதற்கமைய, தற்போது 104,000 கனமீட்டர் கொள்ளளவு கொண்ட தாங்கி அமைப்பின் பணிகளை ஆரம்பித்துள்ளோம்' என இலங்கை கனிமவள கூட்டுத்தாபனத்தின் குழாய் முறைமை மற்றும் இலங்கை கனிமவள சேமிப்பு முனையங்கள் நிறுவனம் ஆகியவற்றுக்குச் சொந்தமான இரு புதிய எண்ணெய் சேமிப்பு தாங்கி அமைப்புகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
'மக்களுக்கு இந்த எரிசக்தியை குறைந்த விலையில் எவ்வாறு வழங்குவது என்பதே அடுத்த முக்கிய பிரச்சினையாகும்' எனக் கூறிய அவர், நாட்டின் பொருளாதாரம் தற்போது உள்நாட்டில் உருவாகும் சூழ்நிலைகளை தாங்கும் திறன் கொண்டதாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள பொதுவான எரிபொருள் மானிய முறையின் கீழ், அதிக எரிபொருளைப் பயன்படுத்தும் பெரிய வாகனங்களை வைத்துள்ள பணக்காரர்களுக்கு அதிக மானியம் கிடைக்கும் அநீதியான சூழ்நிலை உருவாகியுள்ளதாக ஜனாதிபதி திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
'எனவே, பொதுப் போக்குவரத்து, விவசாய இயந்திரங்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் காய்கறி கொண்டு செல்லும் லொறிகள் போன்ற உண்மையான தேவைகளைக் கொண்ட துறைகளை மட்டும் இலக்காகக் கொண்டு எரிபொருள் மானியங்களை வழங்குவதற்கான புதிய டிஜிட்டல் பொறிமுறையை உருவாக்குவது குறித்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளோம்.'
தற்போதுள்ள பொது மானிய முறையை மாற்றி, பொதுப் போக்குவரத்து, விவசாய இயந்திரங்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் காய்கறி கொண்டு செல்லும் லொறிகள் போன்ற உண்மையான தேவை உள்ள துறைகளுக்கு மட்டுமே வழங்கும் புதிய டிஜிட்டல் பொறிமுறையை உருவாக்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
