சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீதான தாக்குதல்! இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம்

சவூதி அரேபியாவின் சிவில் விமான நிலையங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட அண்மைய தாக்குதல்களுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்தியுள்ளது.

மேலும், சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் இலங்கை தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. பதற்றத்தைத் தணிப்பதற்காக அனைத்துத் தரப்பினரும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடித்து, ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், வியாழக்கிழமை ரியாத் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூவர் உயிரிழந்ததாகச் சவூதி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்ததாகவும், சவூதி அரேபியாவின் விமானப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தாக்குதல்களில் சவூதி விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரியாத் நகருக்கான பல விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

யேமனைத் தளமாகக் கொண்ட ஹூதி அமைப்பு, வியாழக்கிழமை ரியாத் விமான நிலையத்தை இலக்குவைத்து இரண்டு ஏவுகணைகளை ஏவியதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா–ஈரான் மோதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிராந்தியப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment