சவூதி அரேபியச் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை, கருணை அடிப்படையில் சவூதி அரசு விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் விசேட அமைதி வழி உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இப்போராட்டம் இடம்பெறுகிறது.
மரண தண்டனை விளிம்பில் இருக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனோஜனை சவூதி மன்னர் மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இலங்கை அரசு, தமிழ், இஸ்லாமிய மற்றும் பௌத்த அமைப்புகள் முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்குச் சக்தியூட்டும் வகையில் அமைதியான முறையில் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் செயலாளர் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம், கொழும்பில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மூவின மக்களும் நேரில் வருகை தந்து ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாடு முழுவதிலும் உள்ள சுமார் 1,000 இந்து அமைப்புக்கள் மற்றும் திருக்கோயில்களின் பிரதிநிதிகளிடம் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மகஜர் இலங்கை அரசு, சவூதி அரேபிய அரசு, இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிற்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஓர் இளைஞனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, கட்சி மற்றும் மத வேறுபாடுகளின்றி அனைத்து மக்களையும் ஒன்றிணையுமாறு அமைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
