சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான அனோஜன் சிவராசா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் அனோஜனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் அனோஜன் தொலைபேசி ஊடாக தங்களை தொடர்புகொண்டு தகவல் வழங்கியதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
அத்துடன், அனோஜனின் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சவூதிக்கு சென்றுள்ள இலங்கை குழுவினருக்கும் தொலைபேசி மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனோஜனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவரது உயிரை பாதுகாப்பதுடன், அவரை விரைவாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரது குடும்பத்தினர் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
