சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக சவூதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலின்போது விமான நிலையத்தின் 4ஆம் இலக்க பயணிகள் முனையத்தில் தீப்பரவல் ஏற்பட்டதாகவும், சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, சனிக்கிழமை விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ரியாத் விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில் கவலைகள் அதிகரித்துள்ளன.
யேமனைத் தளமாகக் கொண்ட ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்துவதாக அறிவித்துள்ளனர். மக்கா மற்றும் மதீனா புனித நகரங்களைத் தவிர்ந்த ஏனைய விமான நிலையங்களையும் இலக்காகக் கொள்ளக்கூடும் என ஹூதிகளின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரியா எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், சவூதி அரேபியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடுவோர் பாதுகாப்பு நிலைமை மற்றும் தங்களது நாட்டின் பயண ஆலோசனைகளை அவதானிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் அவர்களுக்கு எதிரான படைகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி அரேபியாவின் விமானப் போக்குவரத்து மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான பதற்றமும் அதிகரித்துள்ளது.
