2025 ஆம் ஆண்டில் பதிவான 2,439,917 பயனாளிகளுடன் ஒப்பிடும்போது, 2026 ஆகஸ்ட் நிலவரப்படி அஸ்வெசும நலன்புரிப் பயனைப் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 1,251,522 ஆகக் குறைந்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரசாங்க உதவித் திட்டமான அஸ்வெசும நலன்புரிப் பயனாளிகளின் எண்ணிக்கையில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட 50 வீதம் குறைந்துள்ளதாக இன்று (11) நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ பதிலளித்த போதே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி உதவிகளைக் குறைக்குமாறு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து வந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்கவே இந்த எண்ணிக்கைக் குறைப்புச் செய்யப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் அரசரியிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, அஸ்வெசும திட்டம் 2023 இல் தொடங்கப்பட்டதுடன், அத்திட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்பது உரிய சட்டத்திலேயே கட்டளையிடப்பட்டிருந்தது எனக் குறிப்பிட்டார்.
அதற்கமைய, அஸ்வெசும நலன்புரி நன்மைத் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தற்போது மீளச் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், இப்பணி இந்த மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இதன் கீழ், முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தற்போது மீளச் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 90 சதவீத சரிபார்ப்புப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், செப்டம்பர் மாத இறுக்குள் இப்பணியை முடிக்க எதிர்பார்த்துள்ளோம்.'
2023 ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டபோது 1,773,445 பயனாளிகள் இருந்ததாகவும், 2024 டிசம்பரில் அந்த எண்ணிக்கை 1,761,116 ஆக இருந்ததாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில் பயனாளிகளின் எண்ணிக்கை 2,439,917 ஆக அதிகரித்த போதிலும், பல காரணங்களால் 2026 ஆகஸ்ட் நிலவரப்படி அது 1,251,522 ஆகக் குறைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
அஸ்வெசும நலன்புரிப் பயன் ஆரம்பத்தில் 'மிகவும் வறுமைக்கோட்டுக்குட்பட்டவர்கள்', 'வறுமைக்கோட்டுக்குட்பட்டவர்கள்', 'பாதிக்கப்படக்கூடியவர்கள்' மற்றும் 'இடைநிலைத் தற்காலிகத்தினர்' ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் விநியோகிக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் விளக்கமளித்தார்.
இடைநிலைத் தற்காலிகப் பிரிவினருக்கான சலுகை வழங்குவது 2025 டிசம்பருடனும், பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான கொடுப்பவனவுகள் 2026 ஜூன் மாதத்துடனும் நிறைவுக்கு வந்ததாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார்.
மீளாய்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், அரசாங்கம் தற்போது 'மிகவும் வறுமைக்கோட்டுக்குட்பட்டவர்கள்' மற்றும் 'வறுமைக்கோட்டுக்குட்பட்டவர்கள்' ஆகிய இரண்டு பிரிவினருக்கு மட்டுமே அஸ்வெசும நன்மைகளை வழங்கி வருவதாக அவர் மேலும் கூறினார்.
ஆரம்பத்தில் அஸ்வெசும மாதாந்திரக் கொடுப்பவனவுகள், மிகவும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட பிரிவினருக்கு ரூ. 15,000 ஆகவும், வறுமைக்கோட்டுக்குட்பட்ட பிரிவினருக்கு ரூ. 8,500 ஆகவும், பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு ரூ. 5,000 ஆகவும், இடைநிலைத் தற்காலிகப் பிரிவினருக்கு ரூ. 2,500 ஆகவும் வழங்கப்பட்டதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
பிரதி அமைச்சரின் கூற்றுப்படி, 2025 டிசம்பர் 15 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அஸ்வெசும கொடுப்பவனவுகள் திருத்தப்பட்டு, மிகவும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட பிரிவினருக்கான கொடுப்பவனவு ரூ. 17,500 ஆகவும், வறுமைக்கோட்டுக்குட்பட்ட பிரிவினருக்கான கொடுப்பவனவு ரூ. 10,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டதுடன், இடைநிலைத் தற்காலிகப் பிரிவினருக்கான கொடுப்பவனவு ரூ. 5,000 ஆக உயர்த்தப்பட்டது.
மீளாய்வுச் செயற்பாடுகளில் சுமார் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், இப்பணி நிறைவடைந்தவுடன் தகுதியான பயனாளிகளின் இறுதி எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அசல் கட்டமைப்பின்படி, இடைநிலைத் தற்காலிகப் பிரிவு 2024 ஆம் ஆண்டில் முடிவுக்கு வரவிருந்தது, எனினும் திருத்தங்களை அடுத்து அது 2025 டிசம்பரில் நிறைவடைந்தது. பாதிக்கப்படக்கூடிய பிரிவு 2026 ஜூன் மாதம் முடிவடைந்தது என அவர் குறிப்பிட்டார்.
அசல் அட்டவணையின்படி, எஞ்சியுள்ள இரண்டு பிரிவுகளும் 2027 ஜூன் வரை தொடரும். இதற்கிடையில், மீளக்கணிப்பு மூலம் தகுதியான பயனாளிகளின் இறுதி எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும், அது தற்போது சுமார் 1.2 மில்லியனாக உள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.
