ஒன்லைன் வழியாக ஓடத்தயாராகும் ரயில்கள் - அரசாங்கத்தை நம்பியவர்களுக்கு அடுத்த இடி..!

ரயில் பயணிகள் இணையதளம் வழியாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. www.pravesha.lk என்ற இணையதளம் மூலமாகவும்,pravesha nrayp (App) மூலமாகவும் பயணச்சீட்டுகளைக் கொள்வனவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரயில் பொது மேலாளரைப் பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் ஒருங்கிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக பல ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு விநியோகம் நடைபெறாததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம், ரயில்வே ஊழியர் சங்கம், பாதுகாப்பற்ற ரயில்வே கேட் காப்பாளர்கள் சங்கம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் உட்பட 29 தொழிற்சங்கங்கள் இணைந்து 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளன. ஊழியர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், ரயில் பொது மேலாளர் தன்னிச்சையாகச் செயல்படுவதால் அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. பயணச்சீட்டு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், வழக்கம்போலவே காலை மற்றும் மாலை வேளைகளில் ரயில்கள் இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கோரிக்கைகளுக்குத் தகுந்த தீர்வு வழங்கப்படாவிட்டால், வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

Post a Comment