மண் சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்று (24) மாலை 6.00 மணியளவில் குயில்வத்தை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக இவ்வீதியூடான போக்குவரத்து பல மணிநேரம் தடைப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தடைப்பட்டிருந்த பல கிளை வீதிகளின் போக்குவரத்தையும் சீர்செய்வதற்கு பொலிஸாரும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதனிடையே, ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு மேல்பகுதியில் உள்ள மண் திட்டு ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மஸ்கெலியா பேருந்துக்கு அருகில் நேற்று (24) மாலை சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படாதபோதிலும், அப்பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
தொடரும் மழை காரணமாக ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதி, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி மற்றும் கிளை வீதிகளில் மண் சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால், அவ்வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளை அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு ஹட்டன் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, மேல் கொத்மலை மற்றும் லக்ஷபான நீர்த்தேக்கங்களின் தலா இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.jpg)