குறையுமா எரிபொருள் விலை?

 


அமெரிக்கா தனது திட்டத்தை ஏற்றுக்கொண்டால், ஏழு நாட்களுக்குள் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மீண்டும் திறக்கக்கூடும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி (Abbas Araghchi) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெற்ற 81ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அராச்சி, வாஷிங்டன் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்ட தருணத்திலிருந்து இந்த ஏழு நாள் காலக்கெடு தொடங்கும் எனக் கூறினார்.

அமெரிக்கா முதல் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், அது ஆறாவது நாளில் நீரிணையை மீண்டும் திறக்க அனுமதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதன் பிறகு, ஏழாவது நாளில் தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே இறுதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

வாஷிங்டனிடமிருந்து எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள், கடந்த ஜூன் மாதம் இஸ்லாமாபாத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் கூறினார்.

"அமெரிக்கப் தரப்பில் ஒப்பந்தத்தை எட்டவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் உண்மையிலேயே ஆர்வம் இருந்தால், இப்போது அனைத்தும் தயார் நிலையில் உள்ளன" என்று அவர் கூறினார்.

ஹார்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் கடமைப்பட்டுள்ளது என்று கூறிய அராச்சி, 

ஆனால் அமெரிக்கா தனது தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் மூலம் இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதைத் தடுப்பதாகக் குற்றம் சாட்டினார்.

தெஹ்ரான் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகவே உள்ளது; ஆனால், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தாது என்பதற்கான நம்பகமான உத்தரவாதங்களை விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனால் உலக நாடுகளில் சடுதியாக அதிகரித்துள்ள எரிபொருளின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது 



Post a Comment