18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த மாநாடு நாளை மற்றும் மறுநாள் (12, 13) ஆகிய இரு தினங்கள் புதுடில்லியில் நடைபெறவுள்ளதுடன், மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்த உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திசார், பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
இந்த மாநாட்டில் சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள் மலேசியப் பிரதமர், எகிப்து, ஈரான் மற்றும் இந்தோனேசிய அதிபர்கள், அபுதாபி முடிக்குரிய இளவரசர், எத்தியோப்பியப் பிரதமர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் உலகளாவிய வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்க உள்ளனர்.
சீன அதிபர் சி ஜின்பிங் இந்தியாவுக்கு வருகை தருவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு என்பதால், இந்தியாவும் சீனாவும் நாளை (12) பிற்பகலில் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட பல துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
மேலும், பிரதமர் மோடி இன்று (11) ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியானையும் சந்திக்க உள்ளார்.
'பிரிக்ஸ்' அமைப்பு பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டதுடன்;, 2024 ஆம் ஆண்டில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை இதில் இணைந்தன.
மேலும், இந்தோனேசியா கடந்த ஆண்டு இக்கூட்டமைப்பில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.
