ஷிரான் பஸீக்கின் நெருங்கிய நண்பர் தொடர்பில் வெளியான தகவல்

போதைபொருள் விற்பனை பணத்தில் வாங்கிய 10 கோடி ரூபாய் பெறுமதியான சொத்தினை முடக்கம்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைத்துள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான 'ஷிரான் பஸீக்' என்பவரின் நெருங்கிய நண்பரான ரணதுங்க ஆரச்சிகே நளின் அர்ஜுன என்பவரால் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்ட ரூபா 10 கோடி பெறுமதியான சொத்துக்கள் மற்றும் உடமைகளை முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்கு குறித்த சொத்துக்கள் மற்றும் உடமைகளின் செயற்பாடுகளை முடக்கி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளின் போது, குறித்த சந்தேகநபரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்ட பின்வரும் சொத்துக்களை, எவரேனும் நபருக்கு விற்பனை செய்தல், கைமாற்றுதல் அல்லது மாற்றுவதைத் தடுத்து நிறுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள 19.90 பேர்ச்சஸ் காணியும் அதில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரு மாடிக் வீடும், களனி பிரதேசத்தில் அமைந்துள்ள 18 பேர்ச்சர்ஸ் காணியும் அதில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரு மாடி வீடும், முடக்கப்பட்டுள்ளது.

இந்தச் சொத்துக்கள் தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் விடயங்களைச் சமர்ப்பித்து, குறித்த முடக்கல் உத்தரவை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் வகையில் நீடித்துக்கொள்வதற்கான அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment