மரணத்தை அதிகரிக்கும் நுளம்பு..!




இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 99,634 ஆகும். இதன்படி மரண வீதம் 0.077% ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், மொத்த நோயாளிகளில் 52.53% மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 52,340 ஆகும்.

மாவட்ட ரீதியில் அதிகளவிலான நோயாளிகள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 21,136 ஆகும்.

இதற்கு மேலதிகமாக:

  • கொழும்பு - 19,569

  • கண்டி - 7,547

  • களுத்துறை - 6,339

  • மாத்தறை - 6,273

அத்துடன், ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 29,964 ஆகும்.

அத்துடன், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். செப்டம்பர் மாதத்தில் இதுவரை 4,144 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தற்போது 37 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிவேக ஆபத்துள்ள மண்டலங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், நுளம்பு பெருகும் இடங்களை அழித்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.

Post a Comment