வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கை கலாசாரப் பொருட்கள்! மீட்க புதிய குழு அமைப்பு

வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட இலங்கையின் வரலாற்று மற்றும் கலாசார சொத்துகளை மீளப் பெறுவதற்கான புதிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

யுனெஸ்கோவின் 1970ஆம் ஆண்டின் சர்வதேச உடன்படிக்கையின் கீழ், சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட கலாசார சொத்துகளை மீளப் பெறுவதற்கான உரிமை சம்பந்தப்பட்ட நாட்டுக்கு உள்ளது.

இதன் அடிப்படையில், 2023ஆம் ஆண்டு நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள Rijksmuseum அருங்காட்சியகத்திலிருந்து, லெவூகே திசாவையின் பீரங்கி உள்ளிட்ட 6 வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்கள் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக மீள வழங்கப்பட்டன.

இந்நிலையில், கண்டி யுகத்தில் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையின் கலாசார சொத்துகளை அடையாளம் கண்டு, அவற்றை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க செயற்பாட்டுக் குழுவொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்படவுள்ளது.

மேலும், நெதர்லாந்துடன் கலாசாரப் பொருட்களைப் பரிமாறிக்கொள்வது தொடர்பிலும் இந்தக் குழு அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்கும்.

Post a Comment