பினுரவின் பந்து வீச்சில் வெற்றியை தனதாக்கிய தமிழ் யூனியன் அணி
சிறப்பான பந்து வீச்சில் அசத்திய பினுர பெர்னாண்டோ துடுப்பாட்டத்தில் கைவரிசையை காண்பித்த சினத் ஜயவர்தன மற்றும் நவோத் பரணவிதான ஆகியோரின் ஆரம்பம் எஸ்.எஸ்.சி. அணியை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தி பிரதான கழகங்களுக்கு இடையிலான டி20 சம்பியன் கிண்ணத்தை தமிழ் யூனியன் கைப்பற்றியது.
கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று முன்தினம் (16) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவிஷ்க பெர்னாண்டோ தலைமையிலான எஸ்.எஸ்.சி. அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றது.
அவிஷ்கவுடன் (51) விஷாட் ரன்திக்க (68) ஆரம்ப விக்கெட்டுக்கு 89 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
எனினும் அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் பறிபோனதை அடுத்து எஸ்.எஸ்.சி. அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களையே பெற்றது.
நிர்ணயிக்கப்பட்ட ஓவர் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் எஸ்.எஸ்.சி. சார்பில் ஆடியதோடு அவரால் 5 ஓட்டங்களையே பெற முடிந்தது.
பந்துவீச்சில் பினுர 4 ஓவர்களுக்கும் 22 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை தனவசப்படுத்தினார்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களம் புகுந்த தமிழ் யூனியன் அணி ஆரம்ப விக்கெட்டை ஓட்டம் பெறும் முன்னறே பறிகொடுத்தபோதும் இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த ஜயவர்தன மற்றும் பரணவிதான 133 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இதன்போது ஜயவர்தன 32 பந்துகளில் 9 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 82 ஓட்டங்களைப் பெற்றார்.
மறுமுனையில் பரணவிதான 38 பந்துகளில் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களை குவித்தார்.
இதன்மூலம் தமிழ் யூனியன் 15.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கான 164 ஓட்டங்களைப் பெற்றது.
மொத்தம் 14 அணிகள் பங்கேற்ற பிரதான கழகங்களுக்கு இடையிலான டி20 தொடரில் தமிழ் யூனியன் அணி தோல்வியுறாத அணியாகவே கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
