சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனையைச் சேர்ந்த 24 வயதுடைய சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞருக்குக் கருணை அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூதிடம் வணக்கத்திற்குரிய பானகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்-கஹ்தானி ஊடாக இக்கடிதம் சவூதி மன்னருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, சாஞ்சி சேதியகிரி விகாரையின் பொறுப்பதிகாரி வண. பானகல விமலதிஸ்ஸ தேரர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்த முதலாவது பௌத்த துறவியான வண. பானகல உபதிஸ்ஸ நாயக்க தேரர், இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவராகவும் சேவையாற்றி வருகிறார்.
அனைத்து இலங்கை மக்களின் சார்பில் இக்கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
அறியாமை மற்றும் சமூக முதிர்ச்சியின்மை காரணமாகவே அந்த இளைஞர் தவறிழைத்து விட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ள தேரர், சவூதி அரசு இலங்கைக்குச் செய்து வரும் பொருளாதார பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்து, அந்த இளைஞருக்குக் கருணை உள்ளத்தோடு மன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
