இலங்கையில் சட்டவிரோதமான முறைகளில் பெறப்பட்ட கைப்பேசி சிம் அட்டைகளைப் பயன்படுத்தி இழைக்கப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, சிம் அட்டைகளை வழங்குவது தொடர்பான விதிமுறைகள் திருத்தப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்தார்.
'கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக சிம் அட்டைகளுடன் தொடர்புடைய சட்டவிரோதச் செயல்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் உள்ளிட்ட சட்ட அமலாக்கப் பிரிவினரின் கோரிக்கையைத் தொடர்ந்து, சிம் அட்டை விநியோகம் தொடர்பான விதிமுறைகளை நாங்கள் புதுப்பித்துள்ளோம்' என்று அவர் கூறினார்.
புதிய விதிமுறைகளின் கீழ், புதிய சிம் அட்டைகளை வாங்கும் நபர்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய தேவைகள் நடைமுறைக்கு வரும்போது, நேரலை புகைப்படம் ஒன்றைச் சமர்ப்பித்தல் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட அடையாளச் சரிபார்ப்பு முறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதும், அனைத்து கைப்பேசி மற்றும் சிம் அட்டைப் பயனர்களுக்கும் 100 வீத வாடிக்கையாளர் அடையாள உறுதிப்பாட்டை உறுதி செய்வதற்கான ஒரு திட்டத்தை 2027 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம்.
பொதுமக்களுக்கோ அல்லது வெளிநாட்டினருக்கோ எந்தவித அசௌகரியமும் ஏற்படாத வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும்.'
நாட்டில் சட்டவிரோதச் செயல்களுக்கு சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதைக் குறைப்பதே இதன் பிரதான நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்
நாட்டில் தற்போது கிட்டத்தட்ட 30 மில்லியன் சிம் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. பயனர்களால் எழுப்பப்படும் ஒரு பிரச்சினை சேவையின் தரம் தொடர்பானது ஆகும்.
தற்போதைய நிலையில், அந்தந்த சேவை வழங்குநர்களிடம் உள்ள தரவுகளின் அடிப்படையிலேயே நாங்கள் செயற்படுகிறோம்.
எவ்வாறாயினும், இந்தத் தகவல்களைத் துல்லியமாக கண்காணித்துச் சரிபார்க்கும் முறை நம்மிடம் இன்னும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
