சவூதி அரேபியாவில் தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பில், அரசியல்வாதிகள் பொறுப்புடன் கருத்துகளை வெளியிட வேண்டும் என உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அனோஜன் விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சவூதி அரேபியாவின் சட்டம் மற்றும் இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை கருத்திற்கொண்டு அரசியல்வாதிகள் பேச வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், அனோஜனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே கலவரம் ஏற்படலாம் என தெரிவிப்பது தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் என அவர் விமர்சித்தார்.
அதேவேளை, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கவனயீர்ப்புப் போராட்டங்களைவிட கருணை மனுக்கள் மூலமே இவ்விவகாரத்தில் தீர்வை நாடுவது பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
அனோஜன் செய்ததாகக் கூறப்படும் குற்றம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், அவர் இலங்கைப் பிரஜை என்ற அடிப்படையில் பாதுகாப்பாக நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதே தங்களது விருப்பம் எனவும் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
